தமிழகத்தின் மண்டபம் கடற்கரை அருகே மீன்பிடி படகொன்றில் இருந்து 99 கிலோ கிராம் எடையுள்ள ஹாஷிஷ் போதைப்பொருளினை இந்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், கடலோர கால்படையுடன் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (05) பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 108 கோடி இந்திய ரூபாவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தாங்கிய குறித்த கப்பல் இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சம்பவத்தின் பின்னணி
இந்தியாவில் இருந்து மண்டபம் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதி இரவு மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பல் மூலம் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆழ்கடலில் கண்காணிப்பின் போது, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் கடலோர காவல்படையின் அதிகாரிகள் இலங்கையை நோக்கிப் பயணித்த மீன்படி படகொன்றை அடையாளம் கண்டனர்.
படகின் பயணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அதில் மேற்கொண்ட சோதனையின் போது, 5 சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 99 கிலோ கிராம் எடையுள்ள ஹாஷிஷ் போதைப்பொருளினை மீட்டுள்ளனர்.
இதன்போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக கைதான சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் படகுகள் என்பன இன்று காலை மண்டபம் காவல்படை நிலையத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.
கடத்தலின் முக்கிய நபர் கைது
விசாரணையின் போது, போதைப் பொருள் கடத்தியதை குறித்த சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டனர்.
பாம்பனைச் சேர்ந்த ஒருவர், தங்களிடம் இந்தப் போதைப் பொருளைக் கொடுத்து, ஆழ்கடலில் உள்ள இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கு கைமாற்ற உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
கைதானவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், போதைப் பொருளை ஒப்படைத்த நபரை அவரது வீட்டிலேயே கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்துவதில் அவர் முக்கிய நபராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
கடல் வழியாக போதைப் பொருளை இலங்கைக்கு கடத்திச் சென்றதாக அவர் கூறினார்.
3,300 கிலோ எடையுள்ள ஹாஷிஷ் மீட்பு
போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் இது அண்மைய சம்பவமாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் குஜராத் கடற்பரப்பில் சந்தேகத்திற்குரியா பாகிஸ்தானிய பணியாளர்களினால் இயக்கப்பட்ட படகொன்றில் இருந்து 3,300 கிலோ எடையுள்ள ஹாஷிஷ் ( Hashish ) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இவற்றின் சர்வதேச சந்தை பெறுமதி 2,000 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.