இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் என இந்திய உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மூன்று தமிழர்களை இலங்கை அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ள நிலையில், அந்த கோரிக்கை நிலுவையில் உள்ளதால், மூவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி கோரிக்கையை முன்வைத்தது.
சாந்தன், தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் அண்மையில், விசாரணைக்கு வந்தபோது, சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாந்தனின் உடலை விரைவாக இலங்கைக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு அதற்கான உதவிகளை செய்யுமாறும், இது தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனீஷ்ராஜா முன்னிலையாகி, சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான ஏனைய இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பதாகவும், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கோரி உள்துறை அமைச்சரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.சுந்தரேஷ், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்று தங்களுக்கு தெரியவில்லை என்று பதிலளித்தார்.
இதனையடுத்து 3 பேர் தொடர்பான இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஆனால், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.