கடந்த மாதம் தாக்கப்பட்ட ரூபிமார் சரக்குக் கப்பல் தெற்கு செங்கடலில் மூழ்கியதாக யேமன் அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நவம்பரில் ஹூதி போராளிகள் வணிகக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் இழந்த முதல் கப்பலாக இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கப்பல் மூழ்கியதாகவும், “சுற்றுச்சூழல் பேரழிவு” குறித்து எச்சரித்ததாகவும் யேமன் அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலுக்கு கணிசமான அளவு சேதம்
தாக்குதலுக்கு உள்ளானபோது கப்பல் 41,000 தொன்களுக்கும் அதிகமான உரங்களை ஏற்றிச் சென்றதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை முன்பு கூறியது.
காசாவில் போருக்கு எதிராக, கடந்த ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் இருந்து செங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்களன்று, யேமன் அரசாங்கக் குழு ஒன்று பெலிஸ் கொடியிடப்பட்ட, பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலான ரூபிமாரை பார்வையிட்டதுடன் ஓரிரு நாட்களில் மூழ்கலாம் என்றும் கூறியது.
இந்தத் தாக்குதல் சரக்குக் கப்பலைக் கணிசமான அளவில் சேதப்படுத்தியதாகவும், 18-மைல் (29-கிமீ) தூரத்திற்கு எண்ணெய் படலத்தை ஏற்படுத்தியதாகவும் அமெரிக்க இராணுவம் முன்பு தெரிவித்திருந்தது.
சனிக்கிழமையன்று கப்பல் மூழ்கியதை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைக்கு அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை உடனடியாக பதிலளிக்கவில்லை.
மொகா தாக்குதல்
சனிக்கிழமையன்று இரண்டு தனித்தனி அறிக்கைகளில், யேமனின் மொகா துறைமுகத்திற்கு மேற்கே 15 கடல் மைல் தொலைவில் ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக பிரித்தானியா கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) நிறுவனம் தகவல் தெரிவித்தது.
“குழுவினர் கப்பலை நங்கூரமிட கொண்டுச் சென்ற போது தாக்குதல் நடத்தப்பட்டதாக UKMTO வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கப்பல் ஒன்று மூழ்கியதாகவும் UKMTO அறிவித்துள்ளது.
இரண்டு சம்பவங்களும் ரூபிமார் கடைசியாகக் காணப்பட்ட இடத்திற்கு அருகாமையில் நடந்தாலும் எந்த அறிக்கையும் ரூபிமார் என்று பெயரிடப்படவில்லை.
ஹூதிகள் முன்னெடுத்துள்ள தொடர் தாக்குதல்கள் கப்பல் நிறுவனங்களை தென்னாப்பிரிக்காவைச் சுற்றியுள்ள நீண்ட, அதிக விலையுள்ள பாதையில் செல்வதற்கு வழிவகுத்துள்ளது.
செங்கடல், மற்றும் ஏடன் வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜனவரி மாதம் யேமனில் ஹூதி இலக்குகளைத் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.