பிரான்சுக்கு தப்பிச் சென்ற குற்றப் பிரிவு அதிகாரி

பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துமிந்த ஜயதிலக தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் சந்தேக நபர்களுக்கு விஷம்

துமிந்த ஜயதிலக்க, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவில் இரு சந்தேக நபர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டமை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இருந்து ஹரக்கட்டாவைக் கைப்பற்றும் திட்டமிட்ட நடவடிக்கை உள்ளிட்ட பல விசாரணைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

கடந்த சில நாட்களில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய அவர் முன்முயற்சி மேற்கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த சுற்றிவளைப்புகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதாள குழு உறுப்பினர்களிடம் இருந்து அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததுடன், இது தொடர்பில் அவர் உண்மையையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், போதைப்பொருள் வியாபாரி கஞ்சிபானி இம்ரானிடமிருந்தும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பான குரல் பதிவுகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இரகசிய இடத்தில் மனைவி மற்றும் மகள்

அதன்படி, தனது 7 வயது மகள் மற்றும் மனைவியை இரகசிய இடத்தில் மறைத்து வைத்துவிட்டு பிரான்ஸ் சென்றதாக துமிந்த ஜயதிலக்க தெரிவித்திருந்தார்.

துமிந்த ஜயதிலக கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இலங்கையிலிருந்து பிரான்ஸ் சென்றதாகவும், இலங்கையில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தான் பிரான்ஸ் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் பிரான்ஸ் இராணுவத்தில் சேரவே பிரான்ஸ் வந்ததாகவும், அந்த வகையில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார்.

பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 6ஆம் திகதி வரையான மூன்று வாரங்களுக்கு மாத்திரமே துமிந்த ஜயதிலக்க பொலிஸாரிடம் விடுமுறை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin