இந்தியாவின் இலக்கு பிராந்திய நலனே

இந்தியாவின் பிராந்திய நலன் என்பது பரந்துபட்டது. பிராந்தியத்தில் தான் மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்ற போக்கில் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை மிகவும் சூட்சுமமாக வகுத்து அமுல்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது இந்திய தேசம்.

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தமது கிடுக்குப்பிடிக்குள் வைத்துக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பக்கம் இரு நாடுகளும் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது.

வரலாற்று சான்று

இலங்கையை தமது கைக்குள் வைத்துக்கொள்வதற்கு தேவையான வேலைகளை இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று சொல்லப்படும் இந்திரா காந்தியின் காலத்திலிருந்து வெகுவாக மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தியாவிற்கு ஈழத்தமிழர் அரசியல் தொடர்பில் அக்கறை இல்லை மாறாக இலங்கை தம்மைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக எதனையும் செய்வார்கள்.

இலங்கையை கட்டுப்படுத்த யாரை வேண்டும் என்றாலும் ஆதரிப்பார்கள், யாரை வேண்டும் என்றாலும் கைவிடுவார்கள். விடுதலைப்புலிகள் விடயத்திலும் இதுவே நடந்தது.

இலங்கையை கட்டுப்படுத்துவதற்கு விடுதலைப் போராட்டத்தை ஊக்கிவித்த இந்தியா பின்னாளில் இலங்கையுடன் கைகோர்த்துக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதற்கான ஆயுத,பண மற்றும் தொழிநுட்ப உதவிகளை வாரி வாரி வழங்கியிருந்தது.

இந்தியாவின் கோர முகம்

இந்திய தேசம், வெளிப்படையில் காந்திய முகத்தையும் மறைமுகத்தில் கோரமுகத்தையும் கொண்டுள்ளது என்பதற்கு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் பல ஆதாரங்கள் உள்ளன.

அமைதிப்படை என்ற போர்வையில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களும், இறுதி யுத்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட மனித பேரவலத்தின் பங்குகளையும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை. மேலும் தமிழகத்தில் அமைந்துள்ள ஈழ அகதிகள் சிறப்பு முகாமின் சித்திரவதைகளும் சொல்லும் கதைகள் ஏராளம்.

விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்த பின்னர், தமிழ்த் தேசிய கட்சிகளை தமது கைப்பொம்மைகளாக வைத்திருப்பதற்கும், தாம் செய்யும் வேலைகளை செய்வதற்கும் தூண்டுவதற்குமாய் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

சீனாவை வடக்கு கிழக்கில் கால்ஊன்ற விடக்கூடாது என்று தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா, தென்னிலங்கையிலிருந்து தமிழருக்கான அரசியல்த் தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.

என்ன தான் இருந்தாலும் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தை விட தற்போது தமிழ் மக்களை இந்தியா கைவிட்டுவிட்டது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

About the Author: admin