இலங்கையின் மொத்த கடன் 28,095 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது நிர்வாக காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளதாக அரசாங்கமும், அவருக்கு நெருக்கமானவர்களும் அடிக்கடி கூறினாலும் நாடு அப்படியான நிலைமையில் இல்லை என்பது மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும் பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, அரசின் மொத்த கடன் தொகையானது 24 ஆயிரத்து 671 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் அந்த கடன் தொகையானது 28 ஆயிரத்து 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

துண்டு விழும் தொகை அதிகரிப்பு

இதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 15 மாத கால ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகையானது 3 ஆயிரத்து 424 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தின் முதல் 11 மாதங்களின் வரவு-செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நவம்பர் வரையான 11 மாதத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையானது ஆயிரத்து 601 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், கடந்த 2023 ஆம் ஆண்டின் 11 மாத காலத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையானது 2 ஆயிரத்து 20 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனை தவிர வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், 5 ஆயிரம் மில்லியன் டொலர் மேலதிக கடன் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin