இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 122 ரன்ன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களையும், ஷுப்மன் கில் 38 ரன்களையு சேர்த்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 134 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அடத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான இத்தொடரில் மொத்தமாக 618 ரன்களை 108 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார்.
இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் 600 ரன்களை எடுத்த 5ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், திலிப் சர்தேசய், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருக்கு இச்சாதனையை படைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விர்ராட் கோலி 2014, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 1971 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் ஒரு தொடரில் 600-க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக சுனில் கவாஸ்கர் சாதனை படைத்துள்ளார். கடந்த 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 4 சதங்கள், 3 அரைசதங்களுடன் 774 ரன்களைக் குவித்தார்.
இச்சாதனையை உடைக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இத்தொடரில் மீதம் ஒரு போட்டி இருப்பதால் நிச்சயம் ஜெய்ஸ்வால் இச்சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் அறிமுகமானதிலிருந்து இதுவரை 3 அரைசதம், 3 சதங்கள் (2 இரட்டை சதங்கள்) உள்பட 934 ரன்கள் அடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதானல் இத்தொடரில் மீதம் ஒரு டெஸ்ட் போட்டி உள்ள நிலையில் ஜெய்ஸ்வால் தனது 1000 ரன்களையும் கடப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.