அண்மைய நாட்களாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மோசடியான முறையில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பணத்தை அறிவிட முற்படும் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் கொழும்பு – புறக்கோட்டையில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து மோசடியான முறையில் பணம் அறிவிட முற்பட்ட சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதணி ஒன்றை வாங்கச் சென்ற சுற்றுலாப் பயணியிடம் ஒரு சோடி செருப்புக்கு 9,800 ரூபா கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன், கடைப் பகுதியில் இருந்து வெளியேற விடாமல் தடுத்து வைத்ததுடன், அவர்கள் எடுத்த காணொளியை அழிக்குமாறு கூறி அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் கூறியுள்ளனர்.
25 ரூபா கேட்டு அச்சுறுத்தல்
இதேவேளை, பொலன்னறுவை பகுதியில் உணவு சாப்பிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் இருந்து மோசடியான முறையில் பணம் அறிவிட முற்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
ஐந்தாயிரும் ரூபாவிற்கு 25 ஆயிரம் ரூபா கேட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
உணவகத்தில் அச்சுறுத்தி பணம் பறிப்பதை சுற்றுலா வழிக்காட்டி கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில் குறித்த ஊழியர் சுற்றுலா வழிகாட்டியை தாக்க முயற்படுவதையும், மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதும் வெளிப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் சுற்றுலாப் பயணிகள்
இது மாத்திரமல்லாது, சில முச்சக்கர வண்டி சாரதிகள், பஸ் நடத்துனர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரினாலும் சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் சந்தர்ப்பங்களும் நாட்டில் அதிகரித்துள்ளது.
எனவே, இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி அமைக்கும் பிரதான துறைகளுள் ஒன்றாக காணப்படும் சுற்றுலா துறையில் இடம்பெறும் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.