ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..!

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக 2025 ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் (இன்று) நிறைவு செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin