ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணத்தில் அவரது தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தாம் கடந்த பன்னிரண்டாம் திகதி சிறையில் மகனை சந்தித்த போது அவர் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.
தமது மகனின் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அலெஸி நவல்னி மரணம் அரசியல் படுகொலையாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
விசம் கொடுத்து கொலை முயற்சி
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெஸி நவல்னிற்கு அடையாளம் காணமுடியாத அளவிற்கு நச்சு கொடுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான கட்டத்தில் ஜேர்மனியின் பேர்லின் நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்றிருந்தார்.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஜனாதிபதி புட்டின் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து 2021 ஜனவரியில் ரஷ்யாவிற்கு திரும்பிய நவல்னி மீது ஊழல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சதிப் புரட்சி செய்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
தண்டனைக் காலத்தில் மிகவும் பாதுப்புமிக்க சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதன் பின்னர் 2023 ஆகஸ்ட் மாதம் மேலும் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அலெஸி நவல்னியை சிறையில் காணவில்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தமை சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சுமார் இரண்டு தொடக்கம், மூன்று வாரங்கள் வரை அவரை சிறையில் காணவில்லை என அப்போது தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர் மூன்று வாரங்கள் கழித்து வேறு ஒரு சிறையில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதுடன் பழைய சிறையிலிருந்து புதிய சிறைக்கு மாற்றிய அந்த காலப்பகுதியிலேயே அவர் காணாமல் போயிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் தமது 47 வது வயதில் அலெஸி நவல்னி சிறையில் உயிரிழந்திருந்தார்.
புட்டின் மீதே சந்தேகம்…..
இதேவேளை, ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வாக்னர் கூலிப்படையின் தலைவராகவும் இருந்து எவ்கேனி பிரிகோசின் கடந்த ஆண்டு ரஷ்ய அரசாங்கத்திற்கு திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.
இதனால் புடின் பெரும் அதிர்ச்சியில் இருந்த நிலையில், பின்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிளர்ச்சியை கைவிட்டார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் இடம்பெற்ற இரண்டு மாதங்களில் எவ்கேனி பிரிகோசின் மர்மமான விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
ரஷ்ய அரசாங்கத்தில் முக்கிய பதவி நிலையில் இருந்த பலரும் கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில் புட்டின் மீது பலத்த சந்தேகத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.