உலகில் காணப்படும் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதால், மெக்ஸிகோ வளைகுடா நீரோடை மறைந்து போகக்கூடும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
அதிகரித்து வரும் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, பூமியில் பனிப்பாறைகள் அதிகளவு உருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2025ம் ஆண்டுக்குள், வளைகுடா நீரோடை மீது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைக்கவில்லை என்றால், வளைகுடா நீரோடை 2025 மற்றும் 2095ம் ஆண்டுக்குள் மறைந்துவிடும் என அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பிராந்தியத்தின் காலநிலையை கட்டுப்படுத்துவதில் வளைகுடா நீரோடை இயற்கையாகவே தனித்துவமான பாத்திரத்தை வகிக்கின்றது.
இந்த நீரோடை கடல் வெப்பநிலையின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதன் மூலம் வெப்பத்தையும் கடத்துகிறது.
வளைகுடா நீரோடை இல்லாது போனால் வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை சில தசாப்தங்களுக்குள் 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறையக்கூடும் என்பதுடன் இதனால் பாதகமான காலநிலை மாற்றம் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் கடும் புயல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.