மாகாண பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்ய வர்த்தமானி

இலங்கைத்தீவில் 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, தனிநபர் பிரேரணையாக 22ஆவது திருத்தத்தை கடந்த ஆண்டு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முழு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படக் கூடிய நிலைமை ஏற்படலாம்.

சுதந்திரத்தின் பின்னர் உக்கிரமடைந்த இனப்பிரச்சினை

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், நாளுக்கு நாள் வலுப் பெற்றது.

மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரம், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம், அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழ், சிங்கள மக்கள் இடையே மோதல்களை உருவாக்கியது.

t

1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சிங்கள மொழி, இலங்கையில் ஒரே ஆட்சி மொழியாக கொண்டு வரப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட குழப்பகர நிலைமை காரணமாக 1958ம் ஆண்டு இந்தச் சட்டம் திருத்தப்பட்டாலும் தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் சட்டமாகவே இது அவதானிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இலங்கை தமிழரசு கட்சி அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்தது.

g

இதையடுத்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

பண்டா – செல்வா ஒப்பந்தம் என அடையாளப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள், எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமையினால், குறித்த ஒப்பந்தம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தனிச் சிங்கள சட்டமானது, தமிழ் – சிங்கள மக்களிடையே இனப் பிரச்னை ஏற்படுத்துவதற்கான முதலாவது காரணியாக அமைந்தது என சொல்லப்படுகின்றது.

அதற்குப் பின்னரான காலத்தில் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிரச்சினைகள் உக்கிரமடைய 1970களின் பின்னர் உள்நாட்டு போர் உருவானது.

இந்தப் பின்புலமே தமிழ் ஆயுதப் போராட்டத்திற்கு நேரடியாகவே வழிவகுத்தது. யாழ்ப்பாணம் நகர சபை முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதன் ஊடாக, ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது.

ttg

இந்த நிலையில், 1977ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால், ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் இவரது ஆட்சியில் 1981ஆம் ஆண்டு யாழ்ப்ப்பாண நூலகம் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.

1983ம் ஆண்டு தமிழ் – சிங்கள மக்கள் இடையே இனக் கலவரம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை வலுப் பெற செய்திருந்தனர்.

மாகாண சபைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இவ்வாறு தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் சுதந்திரத்துக்கு பின்னர் பல்வேறு மோதல்களும் வன்முறைகளும் வெடித்து வந்ததன் காரணமாக தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

தமிழர்களுக்கான காணி, போலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு உள்வாங்கும் வகையில் வடக்கு, கிழக்கை இணைத்து மொத்தமாக 8 மாகாணங்கள் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்டன.

rt

அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்றால் என்ன?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

நாட்டில் 9 மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை இருக்கும். எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிப்பு

எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்புச் சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமுல்படுத்துமாறு தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில,

”13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் ஆபத்தான அதிகாரம் பொலிஸ் அதிகாரமாகும்.

மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தேசியவாதிகளின் 37 வருட கால கனவாக இருந்து வருகின்றது.

jj

அந்த கனவை நனவாக்கும் வகையில் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பிக்க முடிந்தது.

பெப்ரவரி 13 ஆம் திகதி, இந்த திருத்தச்சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் காலப்பகுதியில் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது.

இந்தச் சட்டமூலத்தை நீதிமன்றத்தின் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்த எவருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்கள் காலக்கெடு உள்ளது.

இதனை எதிர்த்து தமிழ் பிரிவினைவாதிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்ற பின்னர் அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் இதை நிறைவேற்றி, நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ள நீண்ட காலப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைப் பெறலாம்.

காவல்துறை அதிகாரம் ஏன் ஆபத்தானது?

பல காரணங்களால் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பிரச்சினையாகியுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

யுத்தத்தின் போது சில நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றை வழங்கியதை நாம் நினைவுகூருகின்றோம். மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் ரகசியமாக நடந்தது.

ஆனால், எங்களிடம் உத்தியோகபூர்வ அரச இராணுவம் இருந்ததால், எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் அதை வெளிப்படையாகக் கொடுத்தனர்.

எதிர்காலத்தில் பிரிவினைவாதப் போர் மூண்டால் அது வடக்கு மாகாண பொலிஸாருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில்தான் இருக்கும். இவை இரண்டும் அதிகாரப்பூர்வ படைகள்.

இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்து உள்வாங்கப்படவில்லை

அப்போது இலங்கைக்கு எதிரான பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் பிரிவினைவாத அமைப்பையோ அல்லது வடக்கு பொலிஸ் படையையோ எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாக ஆதரிக்கும் திறன் பெறும்.

இதனால் ஒரு மாநிலம் மத்திய அரசுக்கு எதிராக அல்லது நாட்டுக்கு எதிராக எதிராகச் செல்லும் போது, ​​நேரடியாக தலையிடும் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குவதற்கான உத்தரவுகள் இந்திய அரசியலமைப்பின் 256 மற்றும் 257 வது பிரிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

13 வது அரசியலமைப்புத் திருத்தம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், குறித்த சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்திய அரசியலமைப்பின் அந்த முக்கியமான ஷரத்துகளை நமது அரசியலமைப்பில் உள்வாங்கவில்லை.

மத்திய அரசாங்க பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாகாண சபை அதிகார வரம்பில் பணிபுரியும் போது சீருடையில் கூட பணியாற்ற முடியாது. மேலும், மத்திய அரசின் பொலிஸ் அதிகாரி அந்த மாகாணத்தின் அதிகார வரம்பிற்குள் இருக்கும்போது, ​​அவர் அந்த மாகாணத்தின் டிஐஜியின் கீழ் பணியாற்ற வேண்டும்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கிய பின்னர், 17ஆவது திருத்தம், 19ஆவது திருத்தம், 21ஆவது திருத்தம் போன்ற அரசியலமைப்புத் திருத்தங்களினூடாக பொலிஸார் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆனால் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் முதலமைச்சருக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் 13வது அரசியலமைப்புத் திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.” எனத் தெரிவித்தார்.

kk

13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துமாறு கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியா அழுத்தம்

இந்தியா தொடர்ந்து 13ஐ அமுல்படுத்துமாறு கூறிவரும் பின்புலத்தில் அதில் உள்ள அதிகாரங்களை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தி 13ஐ அமுல்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

ஆனால், இவை வெறும் பேச்சுமட்டத்தில் மாத்திரம் இருந்தமையால் அடுத்தடுத்தான சந்திப்புகளை தமிழ் தரப்பு புறக்கணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin