நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லையென என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலரை ஆதரவளிப்பதற்கு தாம் முன்வந்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மையல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கும் தாம் எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அண்மையில் செயற் குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா அந்த கட்சியினை மீள கட்டியெழுப்பும் நோக்குடன் கட்சியை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தை அமைப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தாம் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லையென புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.