இலங்கைத் தீவில் ஆயுதப்படைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது

முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பை இலங்கை அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன், 2030ஆம் ஆண்டளவில் ஆயுதப்படைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் பேணும் தீர்மானங்களையும் எடுத்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 135,000 ஆக குறைக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு 200,783 வீரர்கள் இராணுவத்தில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 150,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தென்னகோன் கூறுவதென்ன?

இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்து இந்த ஆண்டுக்குள் 135,000 ஆகவும், 2030க்குள் 100,000 ஆகவும் குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டிற்குள் “தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை விமானப்படை வீரர்கள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்களின் எண்ணிக்கையை தலா 35,000 ஆக பராமரிக்க பாதுகாப்பு அமைச்சு எதிர்பார்க்கிறது.

இலங்கை இராணுவம் பொது ஆட்சேர்ப்புகளை நிறுத்தியுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அத்தியாவசிய பிரிவுகளுக்கு மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை சில மாதங்களில் சுமார் 35,000 இராணுவ வீரர்களைக் குறைக்க வழிவகுத்ததுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை விமானப்படையில் சுமார் 35,000 பணியாளர்கள் இருந்தனர். தற்போது 30,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் 27,000 வீரர்களாக பராமரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடற்படையில் ஆட்சேர்ப்பை நிறுத்த முடியாது?

இலங்கை கடற்படையில் தற்போது 40,000 வீரர்கள் உள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“கடற்படைக்கான ஆட்சேர்ப்பை தொடர்கிறோம். ஏனெனில் ஆட்சேர்ப்பு இல்லாமல் எங்களால் செயல்பட முடியாது. ஓய்வுபெறும் எண்ணுக்கும் ஆட்சேர்ப்பு எண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது.

கடற்படை வீரர்களை எவ்வாறு பராமரிக்கிறோம் என்பது குறித்து எங்களிடம் திட்டங்கள் உள்ளன.” என்றும் அவர் கூறியுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தினரை ஒரு இலட்சத்தில் பேணவும் முப்படையினரின் எண்ணிக்கையை மிகவும் குறைந்த மட்டத்தில் பேணுவதுமே அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

100 பிரஜைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களைக் கொண்ட முதன்மையான 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.5 இராணுவத்தினர் இலங்கையில் உள்ளனர்.

கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக யுத்தம், தீவிரவாதத் தாக்குதல்கள் உட்பட பல்வேறு காரணிகளால் தேசிய பாதுகாப்புக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறுகின்றன.

இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் விடயமாக உள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 56,445 கோடியே 8,500,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், தேசிய பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது குறைக்கப்படுகிறது.

மாறிவரும் உலக பொருளாதார சூழ்நிலைகள் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நோக்கில் எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்து பாதுகாப்பு செலவுகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் ஆட்சேர்ப்புகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஆட்சேர்ப்புகளை குறைப்பதன் ஊடாக குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கீட்டை பொருளாதார அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்வது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

Recommended For You

About the Author: admin