”இந்தியாவின் மாநிலமாக இலங்கையின் வடபகுதி”

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அதாவது sea of Sri Lanka என்று சொல்லப்படுகின்ற கடல் பரப்பை ஊடறுத்து கடல் வழிப் பாதையை உருவாக்கி அதை இந்தியாவிடம் தாரை வார்க்கக் கூடிய ஒரு செயற்பாட்டை ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பாக அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்று, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினையைக் கையாளுவதை இலங்கை ஒட்டுமொத்தமாக கைவிட்ட நிலையில் இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கைக் கடற்பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக வடக்குக் கடற்பரப்பிற்குள் நிலைநாட்டி வருகின்றது.

கிட்டத்தட்ட 25, 30 வருடங்களாக இந்தக் கடலில் நாங்கள் இருக்கின்றோம். இந்தக் கடல் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதை காட்டிக் கொள்வதற்காகவே அவர்கள் இந்தப் படகுகளை இலங்கைக் கடற்பரப்புக்குள் அனுப்புகின்றார்கள்.

அந்த விடயத்தை வைத்து இலங்கைக் கடற்பரப்பு இந்தியாவுக்குச் சொந்தமானது என்று வாதிடப் பார்க்கின்றார்கள். அதில் ஒரு அங்கமாக தமிழக படகுகள் இங்கே வருவது, அவர்களுக்கான விடுதலையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  கடிதம் எழுதுவது, அதை இலங்கை அரசு சாதகமாகப் பரிசீலித்து இந்திய மீனவர்களை விடுவிப்பது என்பதன் தொடர்கதையின் அடுத்த கட்டம் தான் இந்த கடல் வழிப்பாதை.

பாதையை அமைப்பது அதனைக் கையாள்வது யார் என்று கேள்விக்கு அப்பால், முற்றுமுழுதாக இந்திய நலன் சார்ந்ததாகத்தான் அது இருக்கப் போகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் போடப்படுகின்ற அந்தப் பாலம் வடமாகாணத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்போகின்றது என்பது உண்மை. இது எதிர்காலத்தில் நாங்கள் அல்லது எங்களது சந்ததியினர் உணர்ந்து கொள்வார்கள் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

எனவே, இலங்கை இன்னும் இதே நிலைப்பாட்டில் இருக்குமாக இருந்தால் இந்த நாடு துண்டு துண்டாக உடைவதையும், இந்த நாடு துண்டு துண்டாக ஒவ்வொரு நாட்டுக்குப் பங்குகளாகப் பிரிக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். ஆகவே, இனிமேலாவது இங்கு இருக்கின்ற புத்திஜீவிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்  என்றார்.

Recommended For You

About the Author: admin