நியூசிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்காவில் அண்மையில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் உயிரிழந்த நிலையில், நியூசிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் கல்வி கற்று வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான குர்ஜித் சிங் என்ற மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

குர்ஜித்தின் தந்தை நிஷான் சிங் தனது விவசாய நிலத்தை விற்று அவரை நியூசிலாந்துக்கு அனுப்பினார். நியூசிலாந்தில் டெலிகாம் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்த குர்ஜித் சிங், டுனெடின் நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூரிய ஆயுதத்தால் பலமுறை குத்தியதால் அவர் உயிரிழந்துள்ளதாக அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது மகன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்த பின்னர், குர்ஜித் சிங்கின் தந்தை நிஷான் சிங் நேற்று நியூலாந்தின டுனெடின் நகருக்கு சென்றுள்ளார்.

தனது மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை திருப்தியடைய போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் நடத்திய விசாரணைகளை அடுத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் கொலை தொடர்பாக நியூசிலாந்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin