ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய 10 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அப்படி நடந்தால், சுதந்திர மக்கள் காங்கிரஸ் நிராகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டம் வெற்றிப்பெறும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார வேலைத்திட்டம் தோல்வியானது என்பதால், அதனை தோற்கடிக்க வேண்டுமாயின் அனைத்து சக்திகளும் அதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
சிதறி போயுள்ளவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் சுதந்திர மக்கள் காங்கிரஸில் எஞ்சியுள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் அரசியல் கட்சி அல்ல என்பதுடன் சிறுவர் சங்கமும் அல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்களை கொண்ட ஒரு அணி.
இந்த அணியினர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை எதிர்த்து சுயாதீனமாக கருத்துக்களை வெளியிட்டு, பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்பட்டு வருகிறது.
இந்த அணியின் உறுப்பினர்களுக்குள் சுதந்திரமான எண்ணங்கள் இருப்பதால், தாம் விரும்பிய அரசியலில் ஈடுபடவும் செல்லவும் இடமளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர மக்கள் காங்கிரஸின் வேலைத்திட்டங்களுக்கு இணங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எஞ்சியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள்.
சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்து தோல்வியடைந்த அணி.
எமது வேலைத்திட்டத்திற்கு இணங்கும் வேட்பாளருக்கு ஆதரவளித்து பொதுத் தேர்தலில் அவருடன் கூட்டணி அமைப்போம் எனவும் குணபால ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளார்.