போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை வழிநடத்தி வந்த இந்த குற்றவாளிகள், நீர்கொழும்பில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கு போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனால், நீதிமன்றத்தினால், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீண்டகாலமாக நிலையத்தில் தங்கியிருக்கும் கைதிகளும் அவர்களுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சேர்ந்த கைதிகள், இந்த போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து மீண்டும் போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னர் ஏனையோரும் இவர்களுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
நீண்டகாலமாக புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியுள்ள இந்த கைதிகள், போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு, நிர்வாகத்தின் பலவீனம், அதிகாரிகளின் பலவீனம், பழகக்கூடிய அதிகாரிகள் தொடர்பான முழு விபரங்களையும் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலுக்கு அமைய நடந்துக்கொள்ளும் போதைப் பொருள் விற்பனையாளர்கள், தினமும் முகாமுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி விட்டு, கைதிகள் வெளியில் செல்வதாகவும் நேற்று பேருந்து ஒன்றை கொள்ளையிட சென்று, அது தவறிய நிலையில், ஒருவரை கத்தியால் குத்தி விட்டு, 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துக்கொண்டு திரும்பி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி ஒருவர்,
“எங்களால் இந்த மட்டத்தில் நடக்கும் பிரச்சினையில் தலையிட முடியாது.தவறியேனும் ஒரு கைதியை கூட தாக்க முடியாது. அப்படி எதுவும் நடந்தால், வாழ்நாள் முழுவதும் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என்பதுடன் தொழிலையும் இழக்க நேரிடும்” எனக்கூறியுள்ளார்.
“யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அதனை ஆரம்பித்தவர்களுக்கு கைது செய்யப்படும் நபர்கள் என்ன செய்வது என்ற திட்டங்கள் இருக்கவில்லை. தற்போது சிறைச்சாலைகள் நிறைந்து விட்டன.புனர்வாழ்வு நிலையங்களில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன”என நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ள நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்படியான நிலைமை ஏற்பட்டமைக்கான காரணத்தை புனர்வாழ்வு பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இவ்வாறு விபரித்துள்ளார்.
“ பால் பாத்திரத்தில் ஒரு துளி சாணியை போட்டது போன்ற வேலையே நடந்துள்ளது. நான் எவர் மீதும் குற்றம் சுமத்த மாட்டேன். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டவர்களே, கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக நடந்துக்கொண்டு, ஏனைய கைதிகளை தவறாக வழிநடத்துகின்றனர்” எனக்கூறியுள்ளார்.