யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகைத்தந்து நிலத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
மக்களிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது தற்போது அம்பலமாகியுள்ளது.
வலி. வடக்கில் மூவாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ளது. இதனை விடுவிக்குமாறு பலகோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது ரகசிய முயற்சியில் குறித்த நிலங்களை அபகரிக்க முயற்சிசெய்கின்றனர்.” என தெரிவித்தனர்.
“விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டங்களை் மேற்கொள்ளப்படும். விடுவிக்கப்பட்ட காணிகளிலேயே இம் மக்களின் எதிர்காலம் உண்டு. எனவே காணியை மீளவும் சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.