அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள தலையிடி ; பணவீக்கம் அதிகரிக்கிறது

ஜனவரி மாதத்துக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மற்றும் கொழும்பு பெருநகர சமூகத்திற்கான நுகர்வோர் பணவீக்க விகிதத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் பணவீக்க விகிதம் 6.4% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 2023 இல் 4.0% ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி மாதம் உணவு வகையின் பணவீக்கம் 3.3% ஆகவும், கடந்த டிசம்பரில் 0.3% ஆகவும் பதிவு செய்யப்பட்டது.உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஜனவரியில் 7.9% ஆக அதிகரித்துள்ளது. இது டிசம்பரில் 5.8% ஆக பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் பணவீக்கம் 76 வீதம் வரை உயர்வடைந்திருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரிய அளவில் உயர்வடைந்திருந்தன.

செல்வாக்கை இழக்குமா அரசாங்கம்?

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றது முதல் பணவீக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்தது வந்தது. இதனால் விலைகளில் காணப்பட்ட தளம்பல் நிலை ஓரளவு ஸ்திரமடைந்துள்ளது.

ஆனால், மீண்டும் பணவீக்க வீதம் மெல்ல மெல்ல உயர்வடைந்து வருகிறது. இது பொருட்களில் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். வற் வரி அதிகரிப்பால் சில பொருட்களில் விலைகள் உயர்வடைந்துள்ள நிலையில் பணவீக்க விகிதமும் அதிகரித்தால் இது நிச்சயமாக அரசாங்கத்துக்கு பாதகமாக அமையும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எதிர்வரும் நான்காம் காலாண்டில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணவீக்க வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்புகள் ஏற்பட்டதால் அரசாங்கத்தின் செல்வாக்கில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin