சீனாவின் நுழைவு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு அவதானத்துடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை (30) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே வைகோ இதனைக் கூறினார்.
அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைத்துள்ளது. சீனாவிடமிருந்து நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தெற்கில் இருந்து (இலங்கையின்) முதலில் வெளிப்படும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்தும் ராஜ்நாத் சிங்கின் கவனத்தை வைகோ ஈர்த்ததுடன், இதுவரை 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் அதனால் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்திய ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் “இந்துத்துவா சக்திகள்” வெற்றி பெற்றால் அது அழிந்துவிடும் என்றும் அவர் கூறினார்