அருட்தந்தை சக்திவேல் அவர்களே இந்து மதத்தினை மதமாற்றம் செய்து அழிப்பதும் நியாயமா

வண.அருட்தந்தை சக்திவேல் அவர்களின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்திக்கான பதில் ஊடக அறிக்கை.

வண.அருட்தந்தை சக்திவேல் அவர்களே, தங்களின் ஊடக அறிக்கை என பத்திரிகை மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை வாசித்தவர்களில் நானும் ஒருவன். குறித்த அறிக்கையின் மூலம் தங்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சார்ந்த எனது பார்வையினை ஊடகங்கள் வாயிலாக தங்களுக்கும், மக்களுக்கும் தெரிவிக்க எண்ணியே எனது இந்த ஊடக அறிக்கையினை எழுதுகின்றேன்.

நமது புதல்விகளான கில்மிசா மற்றும் அசாணியின் வெற்றியினை இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும், சமூகப்பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் கொண்டாடியதும் வாழ்த்தியதும் அதனை மேலும் பேசுபொருளாக்கி பாராட்டுவதும் அவர்களின் திறமைக்கும், அதனால் அவர்கள் எம்மைப் பெருமைப்படுத்தியதற்கும், எம் அனைவராலும் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய நியாயமான அங்கீகாரங்களே. ஒருவேளை அவர்களை நாம் கொண்டாடத் தவறியிருந்தால், இந்தியத் தொலைக்காட்சி இனம் கண்ட எம் பிள்ளைகளின் திறமையினை நாம் பாராட்டவில்லை, கண்டுகொள்ளவில்லை, மதிப்பளிக்கவில்லை என்றதொரு காரசாரமான விமர்சனத்திற்கும் நாம் உள்ளாகியிருப்போம். அருட்தந்தை அவர்களே..! தாங்கள் சொல்வதுபோல இதைவைத்து நடத்தப்படும் அரசியல் என்ற ஒன்று இருக்குமானால் அதுவும் இந்த வெற்றிக் கொண்டாட்டமும் ஒரு சில மாதங்களில் நீர்த்துப்போய்விடும். இவை இயல்பாய், இலகுவாய் கடந்து போய்விடும் என்பது தங்கள் வயதிற்கும், அனுபவத்திற்கும் தங்களுக்கு தெரியாதது இல்லை. அப்படியிருக்க இதனை தற்போது தூக்கிப்பிடிக்கவேண்டிய அவசரமும், அவசியமும் தங்களுக்கு என்ன என்பதே இங்கு கேள்விக்குறியாகி நிற்கின்றது.

அருட்தந்தை அவர்களே..! இன்றைய சந்ததியினருக்கு போராட்ட காலம் மற்றும் அதற்கு முந்தய காலத்தில் இந்திய சினிமாவை நம் மக்கள் எப்படி ரசித்தார்கள் கொண்டாடினார்கள் என்பது தெரியாது என்பதற்காக, இதுவொரு புதிதான பிரச்சினை போலவும், மிகவும் ஆபத்தானது என்றும், எமது சமூகத்தின் அடையாளக் கூறுகளான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவை தீவிரப்படுத்தும் செயல் என்றும் பெரிதுபடுத்தி, பயமுறுத்திப் பேசுபொருளாக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பெரிய கட்டவுட்டுகள் வைத்தும், யானையின் மேல் வைத்து படப்பெட்டி கொண்டுவந்ததனையும், பாடசாலை கட் அடித்து சினிமா பார்க்கச்சென்ற எம் முன்னோர் கதைகளையும், றீகல் சினிமாவில் மாணவர்கள் சேர்ந்து ஆங்கிலப்படம் பார்த்து அதிபரிடம் பிடிபட்ட கதைகளும், இந்தியாவிற்கு கடலால் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு வந்த கதைகளும், அந்தக்காலத்தில் தீவிரமாக எம்.ஜி.ஆர், சிவாஜியை கொண்டாடிய விதங்களும், எம்.ஜி.ஆர் ற்கு சிலை வைத்து இன்றுவரை வணங்கி நினைவுகூறுவதும், போர்க்காலத்தில் நான்கைந்து குடும்பமாக சேர்ந்து ஜென்ரேட்டர் போட்டு ஒரு இரவினில் மூன்று நான்கு படம் பார்த்ததும் மினி சினிமாக்களில் கூட்டம் அலைமோதியதும் போன்ற இன்னும் பல கதைகள் எமக்குத் தெரியாமலில்லை. இவை எல்லாவற்றையும் எம் பிரதேசம் கண்டும், மகிழ்ந்தும், கொண்டாடியும், கடந்து தன் அன்றாட வாழ்வினில் பயணிப்பது காலங்காலமாய் நடப்பதுவே.

தமிழ் சமூகத்தின் அடையாளக்கூறுகளான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவைத் தீவிரப்படுத்தும் செயலின் இன்னொரு செயற்திட்டமாக ‘கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தமிழர் கலாச்சாரமென, இதுவரை காலமும் இந்தியாவின் தமிழகத்தில், பொங்கல் வீரவிளையாட்டாக இருந்த ஜல்லிக்கட்டை இறக்குமதி செய்துள்ளார்’ என்று குற்றம் சாடியுள்ள அருட் தந்தை அவர்களே..!

“யாழ்ப்பாண நாட்டின் மீது படையெடுத்து, யாழ் இராசதானியை வீழ்த்தி, தமிழ் மன்னனினதும் மக்களினதும் உயிர் பறித்து,
ராஜ்ஜியம் பறித்து, எம் இனப் பெண்களை பாலியல் வன்புணந்து, கொன்று புதைத்து, தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான கோவில்களை இடித்து, அதன்மேல் தேவாலயங்களைக் கட்டியது மட்டுமல்லாது இன்றுவரை தமிழினத்தின் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளில் ஒன்றான இந்து மதத்தினை மதமாற்றம் செய்து அழிப்பதும், மதமாற்றத்தின் மூலம் யாரும் உணரா வகையினில் பாரியதொரு தமிழர் இன அழிப்பினையே நடாத்தும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தாங்கள், ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாட்டை அழிக்கும் செயற் திட்டத்தின் ஓர் பகுதி எனக் கூறுவது நகைப்பாக உள்ளது. நீங்கள் கடந்தகால பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்துவிட்டல்லவா இதை பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எமது தமிழினம் தமது வரலாற்றுப் பக்கங்களில் எதனையும் மறந்துவிடவில்லை என்பதனை தாங்கள் நன்கு அறிய வேண்டுகிறேன்.

மேலைத்தேய உணவு, உடை, கலாச்சாரம், மதம், விளையாட்டை உள்வாங்கி சில நூற்றாண்டுகளாக நீங்கள் உட்பட பல தமிழ் பேசும் மக்கள் பயணிப்பதை தாங்கள் மறந்துவிட்டீர்களா?
மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துடுப்பாட்டம், கால்பந்து, போன்ற பல விளையாட்டுகளைத்தான் நாம் நாடுகளுக்கிடையிலும், கிராமங்களிலும், பாடசாலைக்களுக்கிடையிலும், தெருக்களிலும் விளையாடுகிறோம் என்று நீங்கள் சிந்திக்கவில்லையா? இவை இப்படி இருக்க, மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டுக்களை விளையாட எம் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி வருவதிலும் பார்க்க, தமிழ் தொன்மை நூல்கள் குறிப்பிடும் தமிழினத்தின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதலை (மஞ்சுவிரட்டு ஃஜல்லிக்கட்டு) நாம் மீண்டும் இங்கு விளையாட ஆரம்பிப்பதால் எந்தப் பாதிப்பும் நிகழ்ந்துவிடாது. மாறாக தமிழ் மக்களின் வீரமும், பாரததேசம் மற்றும் தமிழ் நாட்டின் தொடர்பும் பிணைப்பும் தமிழன் என்ற உணர்வும் பலமும் எமது இளையோரிடையே அதிகரிக்கும். இந்த ஒற்றுமையும், பலமும், உறவும் தங்களில் யாரிற்கும் ஏன் பயத்தினை ஏற்படுத்துகிறது?
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகளை மனிதர்கள்தான் அடங்குவார்கள் ஆனால் ‘ஜல்லிக்கட்டின் அடுத்தகட்டமாக தமிழ் மாடுகளும் சிங்கள மாடுகளும் மோதும் நிலை உருவாகலாம்’ என்று நீங்கள் சொல்வதன் மூலம் ஏன் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையே விரோத மனப்பாங்கையும் வன்முறை எண்ணங்களினையும், குழப்பமானதொரு மனநிலையினையும் தோற்றுவிக்க விளைகிறீர்கள்? இவ்வாறு எழுதுவதன் மூலம் தமிழ் மக்களின் மனதில் என்ன எண்ணத்தினை விதைக்க முயல்கின்றீர்கள்?

வடக்கத்தயான், தோட்டக்காட்டான், வந்தேறி, மலையகத்தமிழர் என்று பழித்துப், பிரித்துப்பேசி ஒதுக்கப்பட்டிருந்த மக்கள் கூட்டம் இன்று தாம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்ற ஒருமித்த குரலோடு தமக்கான நியாயமான உரிமைகளை மீட்டெடுத்து தம் வாழ்வினை வளமாக்க தம்மை பாரத தேசத்தின் பூர்வ குடிகளாக அடையாளப்படுத்தி, கரம் கோர்ப்பதில் என்ன பிழை கண்டீர்கள்? ஓர் வல்லரசு தேசத்தின் ஆதரவுடன் அவர்களின் கைகள் பலப்படுவது தங்களுக்கு ஏன் பயத்தினை ஏற்படுத்துகிறது?

‘தொண்டமான் குழுவினர் பண்பாட்டு அழிவை முன்னெடுக்க பொங்கல் விழாவைப் பயன்படுத்துவது வெட்கக் கேடான செயல்” என்று பழி சொல்லும் நீங்கள், தமிழ் மக்கள் கடவுளாக வழிபடும் சூரிய பகவானுக்கு நாம், நல்ல அறுவடையை எமக்கு தந்ததற்காக நன்றி சொல்லி கொண்டாடும் தைப்பொங்கலினை ‘கிறிஸ்தவப் பண்பாட்டு மயமாக்கல்’ (Incultaration) திட்டத்தின் ஒரு பகுதியாய் கிறிஸ்தவ தேவாலயங்களில் சூரியனுக்கு நன்றி செலுத்தாமலும், பாதணிகள் அணிந்த கால்களுடனும் ‘தைத்திருநாள்’ என்ற பெயரில் அண்மைக்காலமாக கொண்டாட ஆரம்பித்ததனை எப்படியானதொரு செயல் என விழிப்பது அருட்தந்தை அவர்களே?

“தொண்டமான் குழுவினர் தாங்கள் பேரினவாதிகளின் கைக்கூலிகள் என்பதை அடையாளப்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தேவாலயங்களில் தைத்திருநாள் என்று தைப்பொங்கலினை கொண்டாடுவதும், பல இந்து சமயக்கூறுகளினைத் தமிழர் பண்பாடு என்ற பெயரில் ‘கிறிஸ்தவ பண்பாட்டு மயமாக்கல்’ திட்டத்தின்கீழ் கிறிஸ்தவ மதத்துடன் இணைத்து பயணிப்பதையும், மதமாற்றம் மூலமாக இன அழிப்பினையும் மேற்கொள்வதனால், “தங்களை மேலைத்தேசத்தின் அல்லது வத்திக்கானின் கைக்கூலிகள் என்று நீங்கள் அடையாளப்படுத்தியுள்ளீர்கள்” என்று நாம் குறிப்பிடலாமா அருட்தந்தை அவர்களே?

கடந்த வருடம் தங்கள் ஊடக அறிக்கையில் “தைப்பொங்கல் எனக் கூறிக்கோண்டு ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதையோ அல்லது அவரின் வருகையை வரவேற்பதையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என்று கருத்து வெளியிட்டு அப்பாவி இந்து மாணவர்களைத் தூண்டி நல்லூர் சிவன் கோவிலில் நடைபெறவிருந்த தேசிய பொங்கல் விழாவுக்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்து அவர்களை கடந்த ஒரு வருடங்களாக அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ஏறி இறங்க வைத்தீர்கள். உங்கள் ஒரு அறிக்கையால் தூண்டப்பட்டவர்கள் 08.01.2024 அன்றே குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் தூண்டிவிட்ட தாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, கடந்த வருடம் மடு அன்னை பேராலயத்திற்கு வந்து வழிபாட்டில் கலந்து சென்ற அதி மேதகு ஜனாதிபதிக்கு, தைப்பொங்கலுக்கு சிவன் கோவில் வந்தபோது எதிர்ப்பு அறிக்கை விட்டது போல, தமிழர் தாயகத்தில் காலடி வைக்கவேண்டாம் என்று ஏன் நீங்கள் அறிக்கை வெளியிடவில்லை? அல்லது மன்னாரினை தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியாக நீங்கள் எண்ணாமல் வத்திக்கானின் ஒரு பகுதியாகத்தான் மன்னார் பார்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

சிங்கள மக்கள், சிங்கள அரசியல்வாதிகளின் மத்தியில் தமிழ் இந்துக்களை எதிரியாக சித்தரிக்க வேண்டியதன் பின்னணிதான் என்ன?

வண. அருட்தந்தை சக்திவேல் அவர்களே..! பாரத தேசத்திற்கும், தமிழ் மக்களுக்குமான உறவினை சிதைக்கும் விதமான கருத்துக்களினை விதைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தாமலும், கிறிஸ்தவ மக்களுடன் அன்பாய் அனுசரித்து, சகோதரர்களாய் வாழும் தமிழர்களின் பொறுமை, சகிப்புத்தன்மை, அப்பாவித்தனத்தை தங்களுக்கு சாதகமாக்கி, தமிழ் இனம் காக்கும் போர்வையில், மத அரசியல் செய்யாதிருக்குமாறும் தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
என்றும் அன்பின் வழியில்,

ரெ.துவாரகன்

Recommended For You

About the Author: admin