இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. அதில் சிவஞானம் ஶ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, புதிய நிர்வாக தெரிவு தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை உப்புவெளியிலுள்ள பீச் ஹொட்டலில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடைபெறும். இதன்போது,புதிய நிர்வாக தெரிவு குறித்து கலந்துரையாடப்படும்.
அதன்போது கட்சியின் பல பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் குறித்த நம்பகமான சில தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில், செயலாளர், நிர்வாக செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி – இணக்கப்பாடு ஏற்பட்டால், மத்தியகுழுவிலேயே புதிய நியமனங்கள் இறுதியாகும்.
இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், பொதுச்சபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் உப தலைவர் அல்லது மூத்த துணைத்தலைவர் பதவிகளில் ஒன்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு வழங்கப்படவுள்ளது.
கட்சியின் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த ஞா.சிறிநேசன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்குமாறு, ஒரு தரப்பினர் தொடர்ந்து கட்சித் தலைவர் சிறீதரனிடம் வலியுறுத்தி வருகின்றது. எனினும் அதற்குப் பதில் நிர்வாக செயலாளர் பதவி அல்லது வேறொரு பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே குலநாயகம் கட்சியின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் உத்தேசத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கட்சியின் உப செயலாளராக, மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை நியமிக்கப்படக்கூடும் என்று தெரிய வருகின்றது.
பொருளாளர்களாக கனகசபாபதி மற்றும் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மகளிர் அணி செயலாளராக ரவிராஜ் சசிகலாவை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது்.
இளைஞரணி செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
நேற்று மாலை வரை இறுதி செய்யப்பட்ட பட்டியலில் உள்ள விபரங்களே இதுவாகும். இருப்பினும் இன்று இறுதி நிமிடம் வரை இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.