ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவால் போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட 65 உக்ரைன் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
விமானத்தில் மொத்தம் 74 பேர் இருந்ததாகவும் அது விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
அந்த 65 போர் கைதிகளை உக்ரைனிடம் ஒப்படைத்து விட்டு, அதற்கு பதிலாக உக்ரைன் கைது செய்துள்ள ரஷ்ய இராணுவ வீரர்களை மீட்க திட்டமிட்டிருந்தாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், விமானம் விபத்துக்கு உள்ளானது தொடர்பாக கலந்துரையாட அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டுமாறு ரஷ்யா, ஐக்கிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்குபு சொந்தமான இந்த இராணுவ விமானத்தை உக்ரைன் வேண்டும் என்றே சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. விமானத்தை இலக்கு வைத்து உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஒரு பயங்கரவாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து உக்ரைன் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
எனினும் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானங்களைச் சுட்டு வீழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடரும் என உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த அந்த விமானங்களில் ரஷ்யா ஏவுகணைகளை ஏற்றிச் செல்வதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் தமது பிடியில் உள்ள போர் கைதிகளை விடுதலை செய்து ரஷ்யாவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அதற்காக குறிக்கப்பட்ட இடத்துக்கு ரஷ்ய வீரர்களை அழைத்துச் சென்றதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளான சூழ்நிலை குறித்து ஆராய்ந்து தமக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி விளாடீமீர் செலென்ஸ்கி நேற்று (24) கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் போர் கைதிகளின் உயிர்களுடன் ரஷ்யா விளையாடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.