பொடுகு தொல்லையை முற்றாக நீக்குவது எப்படி?

இன்று பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் பொடுகு பிரச்சினை உள்ளது.

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றது.

இவற்றை எளியமுறையில் கூட தீர்க்க முடியும் தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலசவும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச்சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, தலையை அலசவும். பேக்கிங் சோடா, பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும்.

சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிடவும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

Recommended For You

About the Author: webeditor