இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 58 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியரான வசந்த அதுகோரள, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் கடன் தொகை அதிகரிப்பு
அதன் பிரகாரம் தனிநபர் கடன் தொகை பதினைந்து இலட்சத்து ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 2019ம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிநபர்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகளும் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.
திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளின் அளவும் முன்னெப்போதுமில்லாத அளவில் உயர்ந்துள்ளது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தினமொன்றுக்கு இரண்டாயிரம் ரூபா கடன் தொகைக்கு உரித்துடையவர்களாகின்றனர்.
அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்தின் பேரிலும் ஆயிரம் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொள்ள, தத்தமது தனிப்பட்ட தேவைகளுக்கு சகல குடும்பங்களும் நாளாந்தம் ஆயிரம் ரூபா கடனாளியாகிக் கொண்டிருப்பதும் பேராசிரியர் வசந்த அதுகோரளவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.