சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 அணியின் விபரத்தை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாமரி அதபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் தலைவர்கள் மற்றும் அணியின் விபரத்தை வெளியிட்டுள்ளது. ஆடவர் அணியின் தலைவராக இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யதாவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முழுவதும் துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது சகலத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய 11 சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியின் விபரத்தையே ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆண்டின் சிறந்த டி20 மகளிர் அணியின் விபரம் வருமாறு: சமாரி அத்தபத்து (ஐசிசி அணியின் தலைவர் – இலங்கை அணியின் தலைவர்), பெத் மூனி (அவுஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), ஹேய்லி மேத்யூஸ் (மேற்கிந்திய தீவுகள்), நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து), அமிலியா கெர் (நியூசிலாந்து), எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா), ஆஷ்லே கார்ட்னர் (அவுஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மேகன் ஷாட் (அவுஸ்திரேலியா) ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளது.
118 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சமாரி அத்தபத்து, 2554 ஓட்டங்களையும் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.