இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் 13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான தேர்தலில் வாக்களிக்க கட்சியின் உறுப்புரிமை கொண்ட 350 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் எந்தக் கிளையிலும் உறுப்புரிமை இல்லாத கொழும்பிலிருந்து வந்த பெண் வாக்கெடுப்பு இடம்பெற்ற மண்டபத்திற்குள் உள்ளார். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 13 பேரின் பெயர் வாக்களிக்கும் பட்டியலில் வெட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜனநாயக முறையில் தேர்தல் இடம்பெறவில்லை. இவ்விடயம் எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மை இத்தேர்தலில் புறக்கணித்தமை தொடர்பில் கட்சியின் முன்னால் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நிர்வாக செயலாளர் கணநாயகம் ஆகியோரிடம் முறையிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் களத்தில் ஏற்பட்ட குறித்த சலசலப்பு காரணமாக தேர்தல் சற்று தாமதாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.