ஆப்கானிஸ்தானில் இன்று காலை விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ, தனியார் விமானமோ இல்லை. அது மோராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம். மேலதிக தகவலுக்காக காத்திருக்கிறோம்” என இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டு ஆறு பேர் பயணித்த சிறியரக விமானமொன்று ஆப்கானிஸ்தான் அருகே நேற்றிரவு முதல் ராடார் கண்காணிப்பிலிருந்து காணாமல் போயுள்ளதாக ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் பதற்றம்; மலையில் மோதி விபத்துக்குள்ளான இந்திய பயணிகள் விமானம்
இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குறித்த பயணிகள் விமானம் பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானதாக பதக்ஷான் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு மீட்பு படையினரும், பொலிஸாரும் விரைந்து சென்றுள்ளதாக பதக்ஷான் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இதுவரையில் விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பிலும், அவர்களின் நிலை குறித்தும் இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.