சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும், வங்கிகள் ஊடாக கடன் வசதிகளை பெற முற்படும் போது ஏற்படும் இறுக்கமான நடைமுறைகளால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறித்த சுயதொழில் முயற்சியாளர்களின் கருத்துக்களில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் எனதெரிவித்திருந்தார்.
அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முற்சிகளை ஊக்குவிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகளையும் வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் துறைசார் அதிகாரிகள், வங்கிகளின் முகாமையாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.