பௌத்த மதம் தொடர்பாக தவறான சித்தாந்தங்களைப் பரப்பி, பௌத்த தத்துவத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் (மகாநாயக்க தேரர்கள்) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பௌத்த மதத்தை அழிக்க முற்படும் இவ்வாறான நபர்களின் செயற்பாடுகளை வெறும் சம்பவங்களாகக் கருத முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதத்தின் உன்னத சித்தாந்தத்தை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை தயார் செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.
மேலும், சமூக ஊடகங்களில் இவ்வாறான கருத்துக்களை பரப்பி பௌத்த சமூகத்தை தவறாக வழிநடத்தி சமூக சீர்கேட்டை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை உடனடியாக தயாரிக்க வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ‘புத்தசாசனத்தின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கு” உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் கோரியுள்ளனர்