தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இது ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதலாவது மாநாடு என்றபடியால் இந்த மாநாட்டை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளமை கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவ்வாறு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்லவிருப்பதாகவும், அதற்கு முன்னரே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க முடிவுசெய்திருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.