இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று முற்பகல் 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள சிறிதரன் எம்.பியின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
எனினும், இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும் என்ற அரசியல் குழுவின் தீர்மானம் தோல்வியடைந்தது. 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்கவில்லை.
மேற்படி சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் ஜனநாய முறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு நடைபெறவுள்ளது.
“நாம் மூவரும் யார் தலைவர் என்று தீர்மானிப்பதைவிட கட்சியின் உறுப்பினர்களே யார் தலைவர் என முடிவு எடுப்பதே சாலச் சிறந்தது. எனவே, எதிர்வரும் 21ஆம் திகதி திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடைபெறும்.” – என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
“தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்வதற்காக மூன்று வேட்பாளர்களும் தமக்குள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க ஒரு நாள் அவகாசம் கட்சியின் அரசியல் குழுவால் நேற்று வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய நாம் மூவரும் இன்று சந்தித்துப் பேசினோம். எனினும், இந்தச் சந்திப்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, வாக்கெடுப்பே ஒரே வழி.” – என்று தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சி.சிறிதரன் கூறினார்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சீ.யோகேஸ்வரனிடம் அவரின் கருத்து தொடர்பில் கேட்பதற்குப் பல தடவைகள் முயன்றோம். எனினும், அவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் அளிக்கவில்லை.