எங்களை சுட்டுக்கொன்றாலும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவோம்! அன்னராசா உறுதி 

எங்களை சுட்டுக்கொன்றாலும் பறவாயில்லை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை தொடர்ந்து நாங்கள் வெளிக்கொண்டு வருவோம்! அன்னராசா உறுதி.

 

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கடற்றொழிலார் சமாசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூ.சங்கங்களின் சமாச செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய தினம் (07-01-2024) ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

 

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கூட்டுறவாளர்கள் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் இவர்களோடு கட்றறொழிலாளர்களையும் இணைத்து நேற்று (06-01-2024) சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்து.

 

வடக்குமாகாணத்தில் உள்ள பல கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களை புறக்கணித்து குறிப்பாக முல்லைத்தீவு, காரைநகர், ஊர்காவற்றுறை சமாசங்கள் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

 

வடக்கு மாகாண கடற்றொழில் சமூகத்துடனான சந்திப்பில் இந்த மூன்று சமாசங்கள் புறக்கணிக்கப்பட்டமை ஏன என்ற கேள்வி எழுகிறது.

 

ஜனாதிபதியின் வருகையை அறிந்து ஊர்காவற்றுறை சமாசத்திற்குட்பட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபியிடம் தெரிவிப்பதற்கு அனுமதி பெற்ற தருமாறு கோரி யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலருக்கும் கடந்த முதலாம் திகதி கடிதம் மூலம் கோரியிருந்த நிலையில் அதற்கான பதிலும் கிடைக்கவில்லை சந்திக்க அனுமதிக்கவும் இல்லை.

 

இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடற்றொழிலாளர் விடயத்தில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. யாழ்மாவட்டத்தில் கட்றறொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முதன்மையாக இருக்கின்ற நிலையில் வடக்கிற்கு வந்த ஜனாதிபதி ஒரு கட்சி சார்பில் அழைக்கப்பட்டவர்களுடன் மட்டும் சந்திப்பினை மேற்கொண்டதன் மூலம் அவர் ஒரு கட்சிக்கான ஜனாதிபதியா? இல்லை கட்சி சார்பானவர்களுக்கான ஜனாதிபதியா என்ற கேள்வியையும் எழுப்புகின்றோம்.

 

ஒரு கட்சி சார்பானவர்களுக்கும் அவர்களுடைய விசுவாசிகளுக்கும் மட்டும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றால் கடற்றொழில் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் எதற்கு? இவ்வாறான சிவில் நிர்வாக கட்டமைப்புகளை ஒரு கட்சியின் பிடிக்குள் கொடுத்துவிட்டு ஒரு கட்சிக்கு ஜனாதிபதியாக குறித்த சந்திப்புகளை மேற்கொண்டிருக்கலாம். நாங்கள் அந்நிய நாட்டவர்களாக? நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தானே?

 

வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் உண்மைகளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் தெரிவித்துவிடுவோம் என்ற அச்சம் காரணமாகவே உண்மைகளை பேசுகின்ற எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு.

 

இதுவரை காலமும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதெல்லாம் வடக்கில் உள்ள மீனவர்களது பிரச்சினைகளையும் உண்மை நிலைமைகளையும் தெளிவாக வெளிகொண்டு வருவதற்கு சந்தரப்பங்களை உருவாக்கியிருந்தார்கள்.

 

ஆனால், ஒரு தமிழர் கடற்றொழில் அமைச்சராக இருந்துகொண்டு கடற்றொழிலாளர்களை பிளவுபடுத்தி அரசியல் உள்நோக்கத்துடன் வழிநடத்துவது வடக்கு கடற்றொழில் சமூகத்தினராகிய எமக்கு மிகுந்த வேதனையையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்களையும் அவர்கள் சார்ந்த அமைப்புகளையும் பிளவுபடுத்தி தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு மீனவர்கள் என்ற போர்வையில் மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களுடன் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அறிவிதுள்ளனர்.

 

இவ்வாறு இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கடற்றொழில் அமைச்சரின் கட்சி ஆதரவாளர்களுடன் சென்று அந்த கட்சியை வளர்க்கப்போகின்றீர்களா? அமைச்சரின் இந்த செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாம். மக்களிடம் சென்று கேளுங்கள் எது உண்மை என்பது தெரியவரும். கடற்றொழில் அமைச்சரின் கருத்தை நம்பி செயற்படுவீர்களானால் கடற்றொழில் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களாகவே கருதப்படும்.

 

வடக்கு கடற்றொழிலாளர்களது பிரச்சினை கட்சி மயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கடற்றொழிலாளர்களது பிரச்சினையை ஒரு கட்சிக்குரியதாக்கி அந்த கட்சிசார்பானவர்களுடன் மட்டுப்படுத்தி முன்னெடுக்கப்படும் என்றால் அது எதிர்காலத்தில் இன்னும் வீரியமடையும். அந்த கட்சி எங்களை சுட்டுக்கொன்றாலும் பறவாயில்லை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை தொடர்ந்து நாங்கள் வெளிக்கொண்டு வருவோம். என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN