பொதுச்சபை உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஆதரவினை பெற்று தமிழரசுக் கட்சியில் தலைவராக தெரிவாவேன் என்ற நம்பிக்கை உண்டு என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பறெ்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக்கட்சியின் தலைமைப்போட்டிக்கு நான் உட்பட மூன்று பேர் போட்டியிடுகின்றோம்.
தற்போதைய சூழலில் ஒரு கட்சியின் தலைவனை தெரிவு செய்யும் உரிமை கட்சியின் தொண்டனுக்கு அமைந்திருப்பது சிறப்பு.
தமிழரசுக்கட்சியின் பொதுச் சபையிலே 400 பேர் அங்கம் வகின்றனர். இவர்களுக்கு நம்பிக்கையான, தங்களுக்கு விருப்பமான தலைகனை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சரியான தலைமைத்துவத்தின் தெரிவின் மூலமே கட்சியின் எதிர்காலம் அமைந்துள்ளது. அதனை பொதுச்சபை உறுப்பினர்கள் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அண்மையில் நான் சந்தித்து பேசிய பொதுச்சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் நான் தலைவரராக வேண்டும் என்கிற எண்ணத்துடனே என்னோடு கலந்துரையாடினார்கள்.
இது மகிழ்ச்சி மிக்க விடயமே. இவர்களின் ஆதரவோடும், பலத்தோடும் தமிழரசு கட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று கட்சியை கட்சியை வழிநடத்தி செல்கின்ற பொறுப்பை ஏற்க தயாராகவே உள்ளேன்.
தேர்தலில் போட்டித் தன்மை காணப்பட்டாலும் ஜனநாயக கட்சி என்ற வகையில் நாம் அனைவரும் இணைந்தே செயற்பட்டு வருகின்றோம்.
உள்நாட்டு அரசியலில் தெளிவாக பயணிக்கின்றோம். தமிழ் மக்களுடைய மரபுடன் கூடிய வலிமைமிகு தாயகத்தை உருவாக்கி, தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை அவர்களுக்கு மீட்டுக்கொடுப்போம்.
தமிழரசு கட்சி தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான பாதையில் நிச்சயம் நேர் பாதையில் செல்லும் என்பதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
என்னுடைய தலைமைத்துவத்தில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழ் தரப்புகளை ஒன்றிணைத்து ராஜதந்திர உறவுகளோடு உலக நாடுகளில் பிராந்திய சக்தியாக உருவாகும் நோக்கோடு அரசியல் தீர்வை அடைவதற்கான பாதையை உருவாக்கி பயணத்தை தொடர விரும்புகின்றேன்” என தெரிவித்தார்.