ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படுவதால் பேருந்துகள், பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.
மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம் (IPPBA), அகில இலங்கை பாடசாலை வேன் நடத்துவோர் சங்கம் (AISVOA), மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் (AITWDU) ஆகியவை ஜனவரி மாதத்தில் தங்கள் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் கருத்து வெளியிடுகையில், புதிய வரி திருத்தத்தின் பின்னர் டீசல் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும். அதனால் பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த நேரிடும். குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 10 ரூபாவால் உயர்த்தும் சூழல் உருவாகலாம்.
இதேவேளை, அதிகரிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பில் தாம் எந்த முடிவுக்கும் இதுவரை வரவில்லை என இலங்கை பாடசாலை வேன் நடத்துவோர் சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்தார்.
பாடசாலை வேன் கட்டணத்தை உயர்த்துவது பெற்றோருக்கு பெரும் சுமை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை வேன் கட்டணத்தை குறைக்க எதுவும் செய்ய முடியாது. அதிகரிக்கவே முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பெற்றோல் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஜனவரி முதல் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் குறைந்தபட்சம் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அரசாங்கம் பெற்றோல் விலையை உயர்த்திய சந்தர்ப்பங்களில் கட்டணத்தை திருத்துவதற்கு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இம்முறை அவ்வாறு இருக்க முடியாது. விலையேற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம் எனவும் அவர் கூறினார்.
வற் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள், சேவைகள், போக்குவரத்து என அனைத்து மட்டத்திலும் அதிகரிப்புகள் இடம்பெறுகிறது.
ஏற்கனவே, இலங்கையில் 60 சதவீதமான குடும்பங்களின் மாத வருமான பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில் வற் வரி அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்