கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2023 இல் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்வு!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் 2023 ஆம் வருடத்திற்கான இறுதிக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் (27.12.2023) கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்கள், அதன் முன்னேற்றங்கள், ஏற்கனவே மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி கோருவதுடன் மாவட்டத்தில் இதுவரை தீர்வுகள் காணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவறுக்கு தீர்வுகாண்பது மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைந்து மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பிலும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் யாழ்/கிளிநொச்சி மாவட்டங்களை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளவுள்ள விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை செயலாளர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் என் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது