சீனாவின் தெற்கு கடற்கரை நகரான ஷியாமென்னில் உள்ள மருந்தகம் ஒன்று இரகசியமாக வாடகைத்தாய் சேவை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்த மருந்தகம் வாடகை தாய்மார் மூலம் வருடாந்தம் சுமார் 300 குழந்தைகள் பிறப்பதற்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியாதை அடுத்து தொடர்ந்து சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஷியாமென் நகர சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஷங்காயை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்றின் செய்தியாளர் ஹங்சோ,ஷியாமென் நகரில் உள்ள மருந்தகங்களுக்குச் சென்று தகவல் சேகரித்து வெளியிட்டுள்ளார்.
ஹொங்காங்கை சேர்ந்த லோங்டுஹுவா மருந்தகக் குழுமம் இந்த சட்டவிரோத வாடகைத்தாய் சேவையை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை வெளியிட்ட ஊடகம், சீன தேசிய சுகாதார ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணைக்குழுவின் அலுவலக அதிகாரிகளை தொடர்புகொண்ட பின்னர் இந்தத் தகவல் குறித்த செய்தி சம்பந்தமான காணொளியை டிசம்பர் 25 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
இதன பின்ன ஷியாமென் சுகாதார அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
சீனாவில் வாடகைத்தாய் சேவை என்பது சட்டவிரோதமானது. இதன் தொடர்பில் சீன அரசாங்கம் அடிக்கடி நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் சீனாவில் சட்டவிரோத வாடகைத்தாய் சேவை என்பது பரவலாக காணப்படுகிறது.
சீனாவில் முன்னர் நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ள ஒரு பிள்ளை என்ற கொள்கையில் சிக்காமல் தப்பிக்க இந்த வழியை நாடுவதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் பலர் சொந்தமாக பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை அல்லது கருவை சுமக்க முடியாமல் இருப்பதால் இந்த சேவையை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடுகள் மாறிவருவதாக கூறப்படுகிறது.
சீனாவில் குறைந்துவரும் பிள்ளை பிறப்பு விகிதத்தால் வாடகைத்தாய் சேவை அவசியம் என சீன பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.