மயிலத்தமடுவில் கஜேந்திரகுமாருடன் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வாய்த்தர்க்கம்

மட்டக்களப்பு பண்ணையாளர்கள் எதிர்நோக்கு மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக மயிலத்தமடு பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பொலிஸாரினால் திருப்பியனுப்பட்டனர்.

இதேவேளை, அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் குறித்த இடத்துக்கு வந்துள்ளமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பில் இருந்து பண்ணையாளர்களுடன் மயிலத்தமடு பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் சென்றுள்ளனர்.

மயிலத்தமடுக்குச் செல்லும் எல்லையில் பொலிஸாரால் காவலரண் அமைக்கப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினரும் பொலிஸாரும் பண்ணையாளர்கள் அப்பகுதிக்குள் செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி செயலாளருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்த தருணத்தில் குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வருகை தந்துள்ளார்.

இதன் போது சற்று பதற்றமான நிலை உருவாகியது. குறித்த இடத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூச்சலிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித பதிலையும் தேரருக்கு அளிக்காமையால் அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளனர்.

மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றக்கோரி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin