கடும் எதிர்ப்பை தொடர்ந்து கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டு பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த காணி அளவீட்டுக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டனர்.

இதனையடுத்து நில அளவைதிணைக்களத்தினர் குறித்த பகுதியை விட்டு வெளியேறினர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்யப்படவிருந்தது.

மேலும், ஆழ்வான் மலையடி, வேலர்காடு, புண்ணன் புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் பகுதிகளிலேயே தொடர்ச்சியான இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது இப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin