உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக உடன்பாடு எட்டப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை ஹங்கேரி எதிர்த்த போதிலும், இறுதியில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த முடிவு உக்ரைனுக்கும் முழு ஐரோப்பாவுக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை எதிர்த்தே ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரை ஆரம்பித்தது. ஒருவருடத்தை இந்த போர் நெருங்கவுள்ள நிலையில், உக்ரைனின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் ரஷ்யாவை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா வரும் நாட்களில் தீவிரப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.