இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த நடத்துனர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இத்தாக்குதல் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும், நேர அட்டவணை பங்கீட்டு நியதிசட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக இ.போ.சபையின் முல்லைத்தீவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய சாலைகளில் இருந்து முல்லைத்தீவிற்கான போக்குவரத்து சேவை இன்று இடம்பெறாது என வடமாகாண தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.