தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள் அலைக்கழியும் பொதுமக்கள் .

தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள் அலைக்கழியும் பொதுமக்கள் .

இதுவரை காலமும் மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளிற்கு மட்டுமே அத்தியாவசியமாக்கப்பட்டு காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட வரம்பு என்பது 2022ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினால் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள சில பிரதேசசபைகளும் அந்த சட்டத்தின் கீழ் வருவதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது . இதில் வடக்கில் வவுனியா,முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகள் பகுதியளவும் யாழ் மாவட்டத்தில் மட்டும் மொத்தமுள்ள 11பிரதேசசபைகளும் முழுமையாக நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்திற்குள் உள்ளடங்குவதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவிக்கையில்

இதனை யாழ்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த முனைந்த போது மானிப்பாய் பிரதேசசபையில் உறுப்பினராக இருந்த நான் இது உள்ளூராட்சி அதிகாரங்களை தந்திரமாக பறிக்கும் உத்தி என்பதை கூறியதோடு எதிர்காலத்தில் மக்கள் மிகுந்த அலைச்சல் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை சபை தவிசாளரின் கவனத்திற்கு எடுத்துரைத்த போதும் அப்போதிருந்த பிரதேசசபை தவிசாளர்கள் யாரும் இதனை எதிர்க்காததினால் இன்று முழுமையாக இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டம் யாழ் மாவட்டத்தில் மட்டும் முழு பிரதேச சபைகளிற்கும் அமுல்படுத்தப்படுவதால் சாதாரண மதில் கட்டுமானத்திற்கான அனுமதியை கிராமப்புறத்தை சேர்ந்த ஒருவர் பெறுவதில் கூட தற்போது பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதோடு சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள்.

இது கிராமப்புறங்களிலே இருக்கக்கூடிய பகுதிகளில் மிக பயத்தையும் பிரச்சினையையும் மக்களுக்குக் கொடுக்கிறது. இதுவரைக்கும் கட்டிட அனுமதியை உறுதி செய்து வழங்கவும் சட்டவிரோத கட்டிடங்களிற்கு நடவடிக்கை எடுக்கவும் 1985ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் படி பிரதேசசபைகளிற்கு இருந்த ஏற்பாட்டை இவ்வர்த்தமானி பிரகடனம் தந்திரமாக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்துள்ளதால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் இறபர் ஸ்ராம்ப் முகவர் அமைப்புக்களாக பிரதேசசபைகள் மாற்றப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக பிரதேசசபைகளால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் சட்டவிரோத கட்டிடமொன்றின் உரிமையாளர் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் நாடி அங்கே அனுமதி பெற்றுவிட்டால் பிரதேசசபைகள் வேறுவழியின்றி தமது நடவடிக்கையில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி கிடைக்கும் வரை பிரதேசசபைகளால் கட்டிட அனுமதிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இது ஒரு பாதகமான நிலையாகும் இதனால் பிரதேசசபைகளிற்கும் வரியிறுப்பாளர்களிற்குமிடையே முரண்பாடுகளும் ஏற்படுகிறது. பொதுமக்கள் அதிக அலைச்சலுக்கு முகம்கொடுக்கிறார்கள்.

முன்னர் எப்படி பிரதேசசபைகள் வசமிருந்த மின்வழங்கல், சுற்றுச்சூழல் அனுமதிகள் தந்திரமாக சட்ட ஏற்பாடுகள் மூலம் பறிக்கப்பட்டனவோ அதே போல் தற்போது கட்டிட அனுமதி வழங்கல் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது.

ஆகவே நகர அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்மாவட்ட நிலை தொடர்பில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ அமைச்சர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கவனமெடுத்து பிரதேசபைகளில் UDA சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தாது நகர அபிவிருத்தியின் பொருட்டு தேவைப்படுமிடத்து நல்லூர் பிரதேசசபையினை முழுமையாகவே அல்லது பகுதியாகவோ, சங்கானை, சுன்னாகம், நெல்லியடி , கைதடி, கொடிகாமம், மானிப்பாய், பண்டத்தரிப்பு ,வேலணை வங்களாவாடி, போன்ற நகரங்களை மட்டும் உள்ளடக்கியதாகவோ இதனை சமூகமட்ட அமைப்புக்கள், முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவோ அல்லது கட்டிட அனுமதியை கொடுப்பதில் பிரதேசசபைகளிற்கு உள்ள சட்ட ஏற்பாட்டை பறிபோகாத வண்ணம் உறுதிப்படுத்துவதன் மூலமாகவே பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin