மறைந்த நடிகர் மயில்சாமியை நினைவு கூரும் மக்கள்

சென்னை: காணும் இடமெங்கும் தண்ணீராக காணப்படுகிறது. வெள்ளநீரில் சென்னையும் புறநகர் பகுதியும் தத்தளிக்கிறது. 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து உதவிய மயில்சாமியை இன்றைய தினம் பலரும் நினைவு கூறுகின்றனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரம் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை நின்று 5 நாட்கள் கடந்த பின்னரும் வெள்ளம் வடியாத காரணத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மற்றொரு பக்கம் அவசர தேவைகளுக்கு கூட அழைக்க முடியாமல், தொலைதொடர்பு சேவைகள் முடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். திரைப்பட பிரபலங்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். பால் பாக்கெட், குடிநீர், உணவுப்பொட்டலங்களை தருவது என பல உதவிகளை செய்து வருகின்றனர். சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் முதல் ஆளாய் களத்தில் வந்து நிற்பவர் நடிகர் மயில்சாமி. கொரோனா காலத்திலும் பலருக்கும் உதவி செய்துள்ளார். AD

வடபழனி, சாலிகிராமம் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்தார். ஒரு நடிகராக இல்லாமல் சக மனிதராக உணவு உள்பட அனைத்து உதவிகளையும் அவர் செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதியன்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகில் போய் உணவு கொடுத்து உதவி செய்தார். சமூக வலைத்தளங்களில் அவரது சேவையை பலரும் புகழ்ந்தனர்.

மயில்சாமி தன்னுடைய சொந்த செலவில் உணவுகளை சமைத்து எடுத்துக்கொண்டு படகில் வைத்து வீடு வீடாக சென்று வழங்கினார் மயில்சாமி. அதன் பிறகு வர்தா புயல் காலகட்டங்களிலும் ஏழை மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார். அத்துடன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானமின்றி தவித்த ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார். அதற்காக பலரிடம் கடன் வாங்கியும் உதவியுள்ளார். தன்னுடைய பகுதி மற்றும் தெரிந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், அவர் செல்லும் இடங்களில் சாலையில் மக்கள் வசித்தால் அவர்களுக்கும் உணவுகள் வாங்கிக் கொடுத்து பசியாற்றியுள்ளார். தற்போது மழை வெள்ளத்தில் சென்னை தத்தளிக்கிறது. எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி நாளில் வழிபாடு நடத்தி விட்டு வந்த சில மணி நேரங்களில் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு ஒடோடி வந்து சேவையாற்றும் மயில்சாமி தற்போது இல்லையே என்று வடபழனி, சாலி கிராம மக்கள் கண்ணீருடன் நினைவு கூர்கின்றனர். மயில்சாமி உயிரோடு இருந்திருந்தால் ஓடோடி வந்து உதவி செய்திருப்பார் என்றும் இணைய தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மயில்சாமி இன்னமும் உயிரோடு இருப்பதாக நம்புவதாகவே சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மயில்சாமி மறைந்து 10 மாதங்கள்கடந்த பின்னரும் பெருவெள்ளம் சூழ்ந்த இந்த நேரத்தில் அவரை நினைவு கூர்ந்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor