டெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்தது. மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. தமிழ்நாட்டில் இன்றும் மிக்ஜாம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த கடிதத்தை இன்று பிரதமர் மோடியிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு நேரில் வழங்கினார்.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக ரூ450 கோடியும் ஆந்திராவுக்கு ரூ493.60 கோடியும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.