முதன் முறையாக வரலாற்று சாதனை படைத்த உகண்டா அணி!

முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது.

ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான ஆபிரிக்கப் பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டியில் ருவாண்டாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உகாண்டா அணி.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி
முதலில் துடுப்பெடுத்தாடிய ருவாண்டாவை 65 ரன்களுக்குச் சுருட்டிய உகாண்டா, வெற்றி இலக்கை 8.1 ஓவர்களில் அடைந்தது. ருவாண்டாவை வீழ்த்தியதன் மூலம் உகாண்டா அணி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்ந்து 3 ஆவது முறையாக நமீபிய அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இருந்து 2 ஆவது அணியாக உகாண்டா தகுதி பெற்றுள்ளது.

உகாண்டா அணி தகுதி பெற்றதை தொடர்ந்து, சிம்பாப்வே அணியின் கனவு தகர்ந்தது. 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, தனது கடைசி ஆட்டத்தில் கென்ய அணியை வீழ்த்தினாலும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணபோட்டிக்கு தகுதி பெற்ற நமீபியா, உகாண்டா அணிகளிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தது.

அதேவேளை 2019, 2023 ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளுக்குத் தகுதி பெறாத சிம்பாப்வே அணி, தற்போது 2024 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor