யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகள் செய்ய தயக்கம்
அதீத வட்டி , மீற்றர் வட்டி என்பவற்றுக்கு பெருந்தொகை பணங்களை வழங்கி , அந்த பணத்தினை வாங்கியவர்கள் மீள செலுத்த முடியாதபோது, அவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் முறைப்பாடுகள் செய்ய தயங்குவதால் , பொலிஸாரினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தற்போது “மீற்றர் வட்டி” மாபியாக்கள் அதிகரித்துள்ளன. எனவே பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முறைப்பாடு செய்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.