கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று (06.11.2023) பிற்பகல் குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் 41, 37 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து வருகை விசா மூலம் இலங்கை வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு செல்வதற்காக நேற்றையதினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து, விமான நிலைய அனுமதி நடவடிக்கைகளுக்காக அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் மற்றும் பிற ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த மலேசிய விசாக்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மூன்று ங்களாதேஷ் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

Recommended For You

About the Author: webeditor