மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து, நித்யானந்தாவின் நியமனம் திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நித்தியானந்தா சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைந்த பிறகு வேறு ஒருவரை ஆதீனமாக நியமித்ததை ஏற்க முடியாது என்றும் தானே மதுரை ஆதீனம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதர் இருக்கும் போதே தன்னைதானே இளைய பீடாதிபதியாக அறிவித்தார் எனவும் தமது மனுவில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.