நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய டி காக் 116 பந்துகளில் 114 ரன்களும், வான் டர் டஸன் 118 பந்துகளில் 133 ரன்களும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 35.3 ஓவரகளில் 167 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 50 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து கடைசியில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்குள் ஒரு கால் பதித்துவிட்டது.
இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேசுகையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங்கில் டி காக் – வான் டர் டஸன் இடையில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதேபோல் பவுலர்கள் திட்டத்தில் இருந்து எங்கும் விலகாமல் சிறப்பாக செயல்படுத்தினர். அதுதாம் நிறைவை அளிக்கிறது. நானும் டி காக்கும் இணைந்து மோசமான பந்துகளை விளாசினோம். சில பந்துகளில் சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது
டி காக்கிற்கு தொடக்கத்தில் பந்து பேட்டில் படவில்லை. சிறிது கடினமாக உணர்ந்தார். ஆனாலும் திட்டத்திற்கேற்ப செயல்பட்டார். வழக்கம் போல் 30 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி, கடைசியில் அதிரடியாக முடித்தோம். அதேபோல் நியூசிலாந்து அணி நிச்சயம் எங்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் என்று தெரியும். அதனால் எங்களின் வாய்ப்புகளுக்காக காத்திருந்தோம்.
நாங்கள் இத்தனை போட்டிகளில் என்ன செய்தோமோ, அதனை தான் செய்துள்ளோம். இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன். நிச்சயம் கொண்டாடிவிட்டு, அடுத்த போட்டிக்கு தயாராவோம் என்று தெரிவித்தார்.